பொய்யா விளக்கு என்ற இந்தத் தமிழ் திரைப்படத்திற்கு ஒரு மிகப்பெரும் முக்கியத்துவம் உள்ளது. கனடா நாட்டின் தலைநகரான ஒட்டாவா நகரில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற ஒரு வரலாற்று தன்மையுடைய வெற்றிகரமான முயற்சி என்ற பெருமையை பொய்யா விளக்கு திரைப்படம் அடைகின்றது.
அதை விட இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால் இதை இயக்கிய இயக்குனர் ஒரு மென்பொருள் மேம்பாட்டாளர் (Software Developer). சினிமாவையும் இலக்கியத்தையும் வாழ்கையையையும் ரசிக்கும் தனேஷ் கோபால் என்ற ஒரு நபரின் முதல் அனுபவமும் இதுதான்.
வெண்சங்கு திரைக்கூடம் (
White Conch Studios ) தயாரிப்பில், அம்புலி மீடியா (
Ambuli Media) உருவாக்கத்தில் டிரான்ஸ்இமேஜ் (
Transimage Productions ) நிர்வாகத் தயாரிப்பில் 31 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு செய்யப்பட்டு உருவான ஒரு உண்மைக்கதை பொய்யா விளக்கு.
ஈழத்தில் (இலங்கையின் தமிழர் பிரதேசம்) 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசாங்க மருத்துவர் ஒருவர், யுத்த களத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தனது மேலதிகாரிகளின் கோரிக்கைகளையும் மீறி, மக்களோடு நின்று சேவையாற்றினார். வைத்தியர் வரதராஜா துரைராஜா என்ற அந்த மருத்துவரின் கதையினை இந்தத் திரைப்படம் கொண்டு வருகிறது.