அதை விட இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால் இதை இயக்கிய இயக்குனர் ஒரு மென்பொருள் மேம்பாட்டாளர் (Software Developer). சினிமாவையும் இலக்கியத்தையும் வாழ்கையையையும் ரசிக்கும் தனேஷ் கோபால் என்ற ஒரு நபரின் முதல் அனுபவமும் இதுதான்.
வெண்சங்கு திரைக்கூடம் (White Conch Studios ) தயாரிப்பில், அம்புலி மீடியா (Ambuli Media) உருவாக்கத்தில் டிரான்ஸ்இமேஜ் (Transimage Productions ) நிர்வாகத் தயாரிப்பில் 31 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு செய்யப்பட்டு உருவான ஒரு உண்மைக்கதை பொய்யா விளக்கு.
ஈழத்தில் (இலங்கையின் தமிழர் பிரதேசம்) 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசாங்க மருத்துவர் ஒருவர், யுத்த களத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தனது மேலதிகாரிகளின் கோரிக்கைகளையும் மீறி, மக்களோடு நின்று சேவையாற்றினார். வைத்தியர் வரதராஜா துரைராஜா என்ற அந்த மருத்துவரின் கதையினை இந்தத் திரைப்படம் கொண்டு வருகிறது.
தமிழ் மக்களை சரமாரியாக கொன்று குவித்த களங்களில் மருத்துவன் என்ற அடிப்படையில் தன் உயிரைப் பணயம் வைத்து சேவைகள் செய்து கொண்டிருந்த டாக்டரை அரசின் ஆணை அங்கிருந்து வெளியேறச் சொன்னது. மருத்துவப் பணியின் சனாதன தர்மத்தினை மீறக் கூறிய அந்த கட்டளையை மறுத்து அங்கேயே தங்கியிருந்து மருத்துவ சேவையை தொடர்ந்த அவரைக் கைது செய்து தமிழர் என்ற காரணத்தால் பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாக்கி, அவர் குடும்பத்தினர் உயிரை பழிவாங்கும் மிரட்டலுடன் அவரை பத்திரிக்கைகள் முன் பொய் சொல்ல வைத்த இலங்கை அரசின் அடாவடித்தனங்களை காட்டுவதுடன் அவர் ஐக்கிய நாடுகளின் சபையில் அளித்த வாக்குமூலத்தையும், அவரின் எதிர்காலம் எப்படிச் சிதைக்கப்பட்டது என்பதையும் சொல்கிறது பொய்யா விளக்கு.
பொய்யாவிளக்கு காணொளி. YouTube Trailer
இலங்கையில் நடந்த மனித உரிமை அத்து மீறல்கள் காலத்தின் ஓட்டத்தில் மறந்து விட்டாலும் அதை அனுபவித்த தமிழர்களின் ரணங்களை உலகம் அறியாதிருந்தாலும் பொய்யாவிளக்கு போன்ற திரைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுகின்றது.
மேலும் ஈழம் சார் கலைப்படைப்புகள் என்ற வரிசையில் அந்நிய நாடுகளில் தம் வசிப்பிடங்களை ஏற்று வாழும் தமிழர்களின் முனைவுகள், வெளிப்பாடுகள் தம் தேசம் சார்ந்ததாகவே உள்ளன என்பது இயல்பு. தாம் பட்ட வேதனகைளை உலகம் அறிய திரைப்படக் கலையை ஒரு ஊடகமாய் ஏற்படுத்தி வரும் இளம் மற்றும் புதிய கலைஞர்களை வாழ்த்துவோம்.
பொய்யா விளக்கு குறித்த ஒரு சிறு திரை விமர்சனம்
முக்கிய கதாபாத்திரமான டாக்டராக, டாக்டர் வரதராஜாவே நடித்துள்ளார் என்பதும் அவர் நடிக்க முயற்சி செய்யாமல் தன் கடந்த காலங்களை நினைவு கூர முயற்சி செய்திருக்கிறார் என்பதன் மூலம் செயற்கைத்தனமான விஷயங்கள் ஏதும் இல்லாமலிருப்பதும் மிகவும் நன்றாயுள்ளது. திரைப்பட நடிப்பின் அடிப்படைகளை புரிந்து கொள்ள ஒரு வார காலம் திரை நடிப்பிற்கான பயிற்சி மேற்கொண்டார். இந்த திரைப்படத்தில் நடித்த இருவரை தவிர மற்ற அனைவரும் முதல் முறை நடித்தவர்கள்.
கனடா வாழ் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் குறைந்த மூலதனத்தில் ஒரு பெரிய காட்சித்தளத்தை காண்பிக்க வேண்டிய கட்டாயத்துடன் செய்த முயற்சி என்பதும், அதில் பாராட்டுமளவு வெற்றி பெற்றதையும் ஒரு மைல்கல் என்றே கூறவேண்டும். பொய்யா விளக்கு பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
KC
No comments:
Post a Comment